தமிழ் மக்களின் அரசியல்: பாதையற்ற பயணமும், பணப் பெட்டிகளின் கூடாரமும்-திரு.மு.திருநாவுக்கரசு

"ஒரு புதிய சிந்தனைக்கும், புதிய பாதைக்கும், புதிய மனப்பாங்கும், தமிழ் அரசியல் கடசிகள் தயார் இல்லை என்றால், தமிழ் மக்களுக்கு அழிவை கொடுத்தவர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு மிஞ்சப் போவது இல்லை"


"ஒரு புதிய சிந்தனைக்கும், புதிய பாதைக்கும், புதிய மனப்பாங்கும், தமிழ் அரசியல் கடசிகள் தயார் இல்லை என்றால், தமிழ் மக்களுக்கு அழிவை கொடுத்தவர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு மிஞ்சப் போவது இல்லை"

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சிங்கள மக்களுக்கு ஒரு தெளிவான முடிவைக் கொடுக்கும்; அது ஒரு தெளிவான விடிவையும் கொடுக்கும். ஆனால், அது தமிழ் மக்களுக்கு குழப்பத்தையும் அழிவையும் துன்பத்தையும் கொடுக்குமே தவிர, வேறு எதனையும் கொடுப்பதற்கில்லை.

தேர்தலுக்கு முன்னான காலம் சிங்கள மக்கள் பக்கத்தில் பெரும் குழப்பங்கள் இருப்பதான காட்சிகள் தோன்றலாம். ஆனால் தேர்தலுக்கு பின்பு யாரோ ஒரு சிங்களத் தலைவர் நாற்காலியில் அமர்வார்; அரச சக்கரம் சுழலும். ஆனால் தமிழ் மக்களின் தலைவிதி தேர்க் காலில் அகப்பட்ட கன்றுக் குட்டியாய் நசிந்து போய்விடும்.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென ஒரு அரசு உண்டு; அவர்களுக்கென ஆயுட்கால முழுநேர அரசியல் தலைவர்கள் உண்டு; அவர்களுக்கென வளர்ச்சியடைந்த அரச இயந்திர கட்டமைப்பு உண்டு; அந்த அரச இயந்திர கட்டமைப்புகளை இயக்கக் கூடிய தொழில்சார் அதிகாரிகளும் நிபுணர்களும் உண்டு.

ஆதலால் முழுநேர தலைவர்களாக இருந்து அரச கலையில் வளர்ச்சியடைந்த சிங்களத் தலைவர்கள் தமது துறை சார்ந்த அதிகாரிகளுடனும் துறைசார்ந்த நிபுணர்களுடனும் இணைந்து அனைவரினது கூட்டு மூளை உழைப்போடு சிங்கள பௌத்த தேசிய இனவாத ஆட்சியை பலமா முன்னெடுத்துச் செல்வர்.

இவ்வாறு முழு நேர தலைவர்களாக இருந்து கூட்டு மூளைப் பலத்துடன் ஆட்சிக் கலையில் பயிற்சி பெற்ற சிங்கள தலைவர்களின் சுண்டு விரல் அசைவுக்குள் பகுதி நேரப் பொழுது போக்கு. அரசியல் வாதிகளான தமிழ் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று போவர். இறுதியில் சிங்களத் தலைவர்களின் அரசியலற் கரகாட்டத்தின் முன்பு தமிழ்த் தலைவர்கள் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த நிலையில் கதியற்று நிற்பர்.

முழுநேர அர்ப்பணிப்பும் சர்வதேச அரசியல் பற்றிய சரியான அரசியல் ஞானமும் இன்றி, தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை ஒரு போதும் வகுக்க முடியாது. சர்வதேச கண்ணோட்டத்திற்கு ஊடாகப் பார்த்தால் தற்போது நடைபெறவுள்ள தேர்தல்கள் முதலாவது அர்த்தத்தில் உலகளாவிய ரீதியில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான தேர்தகள், பிராந்திய ரீதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான தேர்தல்கள் என்பதே உண்மையாகும்.

தென்னாசியப் பிராந்தியம் உட்பட பரந்த இந்துமா கடல் முழுவதும் சீனா கோலோச்சுவதற்கு இலங்கையில் அமையக்கூடிய அரசாங்கங்கள் சீன அரசுக்கு முக்கியமானவை.

2015ஆம் ஆண்டு தேர்தலில் சீனா சற்றும் எதிர்பாராத விதமாக பெரும் தோல்வியை இலங்கையில் தழுவிக்கொண்டது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது ராஜபக்ஷாக்களுக்கு அரசியல், இராணுவ, புலனாய்வு மற்றும் ராஜதந்திர ரீதியில் பெரிதும் உறுதுணையாக நின்ற சீனா, அதன் அடிப்படையில் யுத்த வெற்றியின் பின்பு இலங்கையில் பெரிதும் கால்பதித்துக் கொண்டது. இந்நிலையில் சீனாவை இலங்கையிலிருந்து பின்தள்ளுவதற்காக 2015ஆம் ஆண்டு தேர்தல்களின் போது அமெரிக்காவும், இந்தியாவும் அதிகம் முன்கூட்டிய ஏற்பாடுகளுடன் செயற்பட்டு திட்டமிட்டவாறு சீனாவைப் பின் தள்ளுவதில் வெற்றிபெற்றன.

தோல்வியடைந்து பெரும் காயப்பட்ட சீனா, அதிலிருந்து மீள்வதற்கு அப்போதிருந்தே செயல்படத் தொடங்கி, 2019 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் நிலைக்கு தயாரானது. முன்கூட்டியே பயிற்சி பெற்று களமிறங்கிய ஒரு குத்துச் சண்டை வீரன் போல, சீனா ஏற்கனவே தேர்தல் களத்தில் குதித்துவிட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், ஞானசார தேரர் விடுதலை, முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள், முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அடையாளம் காணப்பட்ட போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவ தலைமை தளபதியாக நியமித்தமை, என்பனவற்றுக்குள் எல்லாம் மேற்படி தேர்தலுக்கான தயாரிப்புகள் புதைந்து கிடக்கின்றன.

மேலும், கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பும், அதன்போது பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவை சீனா முண்டி அடித்துக்கொண்டு பிரதமராக அங்கீகரித்த முதலாவது உலக நாடு என்ற நிலைமையும் இத்துடன் இணைத்து கவனிக்கத் தக்கது.

இந்நிலையில் சர்வதேச சக்திகளுக்கு ஊடாகவும் உள்நாட்டு நிலைமைகளுக்கு ஊடாகவும் தேர்தலை நோக்கி பெரிதும் பலம் பெற்ற ஒரு சக்தியாக ராஜபக்சக்கள் காணப்படுகின்றனர். மேலும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மொத்த சனத் தொகையில் 52% தெற்க்கிலும் 48% வடக்கு கிழக்கிலும் வாழ்கின்றனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின் ஏற்பட்ட வன் செயல்களினால் முஸ்லிம்களின் பாதுகாப்பு பெரிதும் பீதிக்குள்ளாகியது. தெற்கில் சிங்கள மக்களுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் முஸ்லிம் மக்கள் அங்கு தமக்கான சமூகப் பாதுகாப்பை பெறவேண்டுமென்றால் ஆட்சிக்கு வரக்கூடிய இரண்டு பெரும்பான்மை கட்சிகளுடனும் இசைந்து செயல்பட வேண்டியிருக்கும். இந்நிலையில் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டும் வாக்களிக்காது சிங்கள மக்கள் மத்தியில் முனைப்பு பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுக்கும் வாக்களிக்க வேண்டிய அவசியம் உண்டு.

ஆதலால் தெற்கில் வாழும் முஸ்லீம்களில் அரைப் பங்குக்கு குறையாதவர்களின் வாக்குகள் ராஜபக்சக்களைச் சென்றடைய முடியும்.

இறுதியாக நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின் போது அளிக்கப்பட்ட சுமாராக ஒரு கோடியே 25 லட்சம் வாக்குகளில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 66,22,261 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் அரைப்பங்கு மேலாகும்.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அணியினருக்கு 42,07, 728 வாக்குகளே கிடைத்தன. முழு இலங்கைத்தீவு தழுவிய வகையில், தனித்து சிங்கள வாக்குகளால் மட்டுமே ராஜபக்சக்கள் அறுதிப் பெரும்பான்மை பலத்தை அத்தேர்தலில் பெற்றிருந்தனர் என்பது கவனத்துக்குரியது.

ரணில் - சிறிசேனா உட்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் நாட்டுக்கு ஸ்திரமான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்ற அனுபவத்தை கடந்த சில ஆண்டுகளாக சிங்கள மக்கள் அனுபவித்து வருகின்றனர். மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில் உறுதியான அரசாங்கத்தை நாடி ராஜபக்சக்கள் பாக்கம் சிங்கள மக்களின் மனம் சாய்ந்து இருப்பது தெரிகிறது.

இத்தகைய பின்னணியில், தோல்வியை முன்னுணர்ந்த நிலையிற்தான் தனக்கு சவாலான சஜித் பிரேமதாசவை களமிறங்கி அவரை பலியிடுவதன் மூலம் ரணில் விக்ரமசிங்க தன்னைத் தற்காத்து உள்ளார் என்ற அபிப்பிராயம் எழுந்துள்ளதும் கவனத்துக்குரியது. இப் பின்னணியில், தமிழ் மக்களின் வாக்குகளுக்காக சஜித் பிரேமதாச தமிழ்த் தலைவர்களுடன் பலமான ஒப்பந்தங்கள் எதற்கும் தயாராக இருக்க மாட்டார்.

தமிழ் தலைவர்களுடனான, ஒப்பந்தங்கள் எதுவும் சிங்கள மக்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், சிங்களத் தலைவர்கள் எவரும் உறுதியான தேர்தல் ஒப்பந்தங்களை நிச்சயம் செய்ய முன்வர மாட்டார்கள்.

தமிழ் தலைவர்கள் யாரிடமும் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான எந்த விதமான ஒரு திட்டமும் கிடையாது. இதுவரை தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் கடந்த பத்தாண்டுகளாக எந்த விதமான திட்டமும் இருந்ததில்லை.

சிங்கள ஆட்சியாளர்களுக்குச் சேவை செய்வதையும், தமது சுய நலன்களைப் பாதுகாப்பதையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.

மாற்று அரசியல் பேசிய தலைவர்களும் பெரும் குழப்பத்துடன் தான் இருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாற்றுத் தலைமை பற்றி பேசியவர்கள் இரண்டு அணிகளாக உள்ளமை, வடக்கிலும், கிழக்கிலும் அரசாங்க சார்பு கட்சிகள் மூன்று என ஈழத் தமிழ் மக்கள் ஆறு பேரும் துண்டுகளாக உடைந்து கிடக்கிறார்கள்.

இவர்களை ஐக்கியப்படுத்தி ஒரு தமிழ்த் தேசியத் தலைமையை கட்டியெழுப்ப வேண்டியதற்கான ஆளுகையை காட்ட வேண்டிய காலம் இது.

இந்நிலையில் ஒரு புதிய சிந்தனைக்கும், புதிய பாதைக்கும், புதிய மனப்பாங்கும், தமிழ் அரசியல் கடசிகள் தயார் இல்லை என்றால், தமிழ் மக்களுக்கு அழிவை கொடுத்தவர்கள் என்பதைத் தவிர, வேறு எதுவும் தமிழ் அரசியல் வாதிகளுக்கு மிஞ்சப் போவது இல்லை.
-மு.திருநாவுக்கரசு
Share this article :
Print PDF

சிறப்புச் செய்திகள்

Tamil festivals

Contact Form

Name

Email *

Message *

 
Support : Eelam5.com | Eelanila.com | Tamilmideanetwork.com
Powered by Eelam5.com
Copyright © 2019. Eelam5.com ஈழம்5.இணையம் - All Rights Reserved
Eelam5.com
Design by: Nilavan Published by: Eelam5.com